ஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். 2017-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 11 லட்சம் பேர் தேர்வுகளை எழுதினார்கள். மெயின் தேர்வுகள் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ஆம் தேதிவரைநடந்தன. 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேர்முகத் தேர்வுகளும் நடந்தன. அனைத்து தேர்வுகளும் முடிந்த நிலையில், முடிவுகள் அண்மையில் யுபிஎஸ்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன.

இதில் நேர்முகத் தேர்வு முடிந்து அகில இந்திய அளவில் மொத்தம் 990 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 42 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரும் இடம் பிடித்துள்ளனர்.

இந்த தேர்வில் தர்மபுரியை சேர்ந்த கீர்த்திவாசன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் அவருக்கு 27-வது இடம் கிடைத்துள்ளது. அரசியல் அறிவியலை விருப்பப் பாடமாக எடுத்து பயின்ற கீர்த்திவாசன், திருச்சி என்ஐடியில் சிவில் இன்ஜினியரிங் படித்த இவர், அதன்பின் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்துள்ளார்.

மதுபாலன் தமிழக அளவில் 2-ஆம் இடமும் இந்திய அளவில் 71-வது இடமும் பிடித்துள்ளார். எலெட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் டிசிஎஸ்சில் வளாக தேர்வில் பணி கிடைத்தபோதும் அதில் சேராமல், யுபிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்வு எழுதிய இவர், முதல் தடவையிலேயே தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisment

IAS

கடந்த பத்தாண்டுகளாகவே ஐ.ஏ.எஸ்.

தேர்வில் பின்தங்கி வந்த தமிழ்நாடு இந்தாண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது எப்போதும் இல்லாத வகையில் மிக குறைவு. இது கடந்த ஆண்டை விட பாதியளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2016 தேர்வு முடிவுகளில் 84 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அளவு இவ்வளவு குறைந்ததன் காரணமென்ன என விசாரித் ததில் தமிழ்மொழி தாள் தான் காரணம் என சொல்லப்படுகிறது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் இந்தாண்டு குறைந்த அளவில்தான் தேர்ச்சியடைந்துள்ளதாக கூறப் படுகிறது.

இது உண்மைதான் என்றாலும் பிற முக்கிய பாடங்களிலும் தமிழகத்தின் தேர்ச்சி மிக குறைவு. ஆண்டுதோறும் 60 முதல் 100 வரை அதற்கு மேலும் தமிழக இளைஞர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இப்போதோ சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றி பரவலாக விழிப்புணர்வு இருந்தும் பயிற்சி மையங்கள் அதிகரித்திருந்தும் கூட இவ்வளவு குறைந்த அளவில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தின் பங்களிப்பு மிக பரிதாபமானது. அப்படியென்றால் செய்திதாள்களில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களின் சாதனை என கூறப்படுவது போலியானவையா என்ற கேள்வி எழுகிறது. ஆண்டு முழுவதும் சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றி கருத்தரங்குகளும் விளம்பரங்களும் செய்திதாள்களில் அதிகளவில் பார்க்க முடிகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பைவிட இப்போது அனைத்து கல்லூரி மாணவர்களும் சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய போதுமான அளவில் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். அதேபோல என்.சி.ஆர்.டி. உட்பட சிவில் சர்வீசஸ் தேர்விற்கான அனைத்து சிறந்த நூல்களும் சென்னையில் தாராளமாக கிடைக்கின்றது. ஆக தமிழக இளைஞர்கள் இந்த தேர்வுக்கு தயாராவதில்தான் பிரச்சினை. பாடங்களில் சிறந்த தேர்ச்சி இல்லாமையும், தினசரி நாளிதழ் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதும் முக்கிய காரணம்.

ஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்?

Advertisment

ஐ.ஏ.எஸ் ஆக, பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதுமானது. அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும் என்பதை யு.பி.எஸ்.சி பாடத்திட்டம் வகுத்துத்தருகிறது. அதைப் பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam).. இது இரண்டு தாள்களைக்கொண்டிருக்கும். இந்தத் தாள்கள், சரியான விடைகளைத் தேர்ந் தெடுக்கும்வகையில் இருக்கும். முதல் தாள் General Studies. இது பொது அறிவைச் சோதிக்கக்கூடியது.

இரண்டாம் தாள், திறனறிவைக் கூர்தீட்டக்கூடியது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்மட்டுமே அடுத்த நிலை தேர்வான முதன்மைத் தேர்வுக்குச் (Main Exam) செல்ல முடியும். முதல்நிலை தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறீர்கள் என்பதை உங்களுடைய ரேங்கிங் பட்டியலில் கணக்கிடுகிறார்கள். திறனறிவு தேர்வில் 33 சதவிகிதம் மதிப்பெண் பெற்றாலே தகுதி பெற்றுவிடலாம்.

முதன்மைத் தேர்வில் நான்கு பொது அறிவு தாள்களும், ஒரு விருப்பப் பாடம் (Optional Subject) சார்ந்த இரண்டு தாள்களும் இருக்கின்றன. ஒரு கட்டுரை வடிவில் ((Essay) தாள் ஒன்றும், ஆங்கில மொழி தாள் ஒன்றும், இந்திய மொழிகளில் ஒரு தாளும் இருக்கின்றன. ஆகமொத்தம், ஒன்பது தாள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண். இதில் ஆங்கிலமொழி தாளுக்கான மதிப்பெண்ணும், இந்திய மொழி தேர்வுக்கான மதிப்பெண்ணும் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படாது.

இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படும மதிப்பெண் அடிப்படையில், பெர்சனாலிட்டி தேர்வுக்கு (Personality Interview) அழைக்கப்படுவார்கள். இதில் 275 மதிப்பெண். இதில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்பதையெல்லாம் கூட்டி அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களின் ரேங்க் பட்டியலில் வெளியிடப்படும். இவ்வாறு பட்டியல் வெளியிடப்படும்போது தேர்வு எழுதுபவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதிநிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு பயிற்சி வழங்கப்படும். தகுதிநிலை அடிப்படையில் மாநில ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இதை எல்லாம் யு.பி.எஸ்.சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.